வேட்டி கட்டு வேட்டி கட்டு.. குவைத்தைக் கலக்கிய தமிழ்ப் பொங்கல்!
குவைத் சிட்டி: ஊர் விட்டு ஊர் போனாலும், நாடு விட்டு நாடு தாண்டினாலும்.. தமிழர்கள் மறக்காமல் இருப்பது அந்த பாரம்பரியம்தான். அதிலும் பொங்கல் விழா என்றால் நமக்கே தெரியாமல் நம்முள் அந்த உத்வேகம் வந்து உட்கார்ந்து கெத்து காட்டும். அப்படிப்பட்ட பொங்கலை குவைத் நாட்டிலும் தமிழர்கள் ஒன்று கூடி அசத்தியுள்ளனர்.
தை பொறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை. தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது.
தமிழர் திருநாள்... தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். தமிழர்கள் இருக்குமிடமெல்லாம் பொங்கல் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
தமிழர்களின் தாயகங்கள்
தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் கூட விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். மலேசியா,இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையும் கூட விடுகிறார்கள்.
லேட்டானாலும் லேட்டஸ்டாக
நாங்களும் கொண்டாடுவோம் என்று தாமதமாக சென்று கொண்டாடினாலும், மனதார இறைவனுக்கும், நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கும், உடனிருக்கும் மாடுகளுக்கும், உண்ணும் உணவிற்கும் நன்றி செலுத்தி விட்டு வந்திருக்கிறார்கள் குவைத் வாழ் தமிழர்கள்.
பண்ணை இல்லத்தில் பாரம்பரியம்
குவைத் நாட்டில் நண்பர்கள் சிலர் ஒன்றாக wafra என்ற இடத்தில் ஃபார்ம் (farm house) ஒன்றில் மிக சிறப்பாக பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து, குலவையிட்டு, ஆண்கள், பெண்கள் சேர்ந்து கும்மி ஆட்டம் ஆடியும் சர்க்கரை பொங்கலும், வெண் பொங்கலும், கதிரவனுக்கு படைத்து, தலை வாழையில் உணவருந்தி, புகைப்படங்கள் பல எடுத்து, உள்ளம் மகிழ்ந்து கொண்டாடி வந்திருக்கிறார்கள்.
கயிறு இழுத்தல்.. பாட்டு நடிப்பு
கயிறு இழுத்தல், பெண்களுக்கான லெமன் ஸ்பூன், பாட்டு போட்டி, பாட்டுக்கு பாட்டு, நடன போட்டி, நடிப்பு போட்டி போன்ற போட்டிகள் பல நடத்தி அசத்தினர். மனைவி, குழந்தைகளை பிரிந்து வேலை வேலை என்று விடுமுறை இல்லாமலும் நாள் முழுதும் வேலை செய்து கொண்டு வாடும் எங்களுக்கு இந்த ஒரு நாள் அந்த கவலை மறந்து தாயகத்தில் இருப்பது போன்று உணர்ந்தோம்.
மெயின் மேட்டர் இதுதான்
இந்த கொண்டாட்டத்தில் முக்கியமான விஷயம் என்ன தெரியுமா.. அந்த வேட்டி சட்டைதான். ஆண்கள் மட்டுமல்லாமல் ஆண் குழந்தைகளும் கூட வேட்டி சட்டையில் சும்மா கெத்தாக வந்திருந்து தமிழன்டா எந்நாளும் என்று உரத்த குரலில் காட்டிச் சென்றதுதான் இந்த கொண்டாட்டத்தின் ஹைலைட்டே.
0 Comments